சீரடி சாய் பாபா (-15 அக்டோபர் 1918)
மண் மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு மரங்கள் யாவும் துன்பம் நீங்கி இணங்கி வாழ்ந்திட, நல் வழி காட்டிட மண் இறங்கி வந்த இறைவனே சீரடி சாய் பாபா.
1830 – 1835 ஆம் கால கட்டத்தில் அவதரித்த சாயி பாபா தனது 16 ஆம் வயதில் சீரடி வந்தார். இரண்டு வருட சீரடி வாசத்திற்குப் பின் தனது 18 ஆம் வயதில் சீரடியை விட்டு காணாமல் போகிறார். மீண்டும் தனது 20 ஆம் வயதில் சீரடிக்கு ஒரு கல்யாண கோஷ்டியுடன் வருகை தருகிறார். அப்போது மஹல்சபதி எனும் அடியவர் பாபாவை “ஆவோ, சாயி…!” என்று அழைக்கிறார். அன்று முதல் அவர் சாயி பாபா என பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படலானார்.
அதற்குப்பின் சீரடியிலேயே வாசம் செய்ய துவங்கிய பாபா, ஏறக்குறைய 60 ஆண்டுகள் இப்பூவுலகில் அருள் அரசாட்சி செய்து வந்தார். அவர் 1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி விஜயதசமி அன்று மகா சமாதி அடைந்தார். அவரின் மகா சமாதிக்கு பின், அவரின் அருள் அரசாட்சி அருட் பேரரசாக இப்பூவுலகம் முழுவதும் பரந்து விரிந்து வருகிறது.
அனைத்து மதத்தவர்களும், அனைத்து இனத்தவர்களும் பால், வயது வேறுபாடுன்றி அவரின் பாதங்களை சரணடைந்து ஆன்மீக, லௌஹீக வாழ்வில் மகத்தான வளர்ச்சியைப் பெற்று வருகின்றனர்.
அமிர்தத்தினை ஒத்த அவரின் அருட் கடலில் இருந்து, ஒரு துளியை யேனும் சுவைத்திட மாட்டோமா என்று, சீரடி நோக்கி எண்ணற்ற பக்தர்கள் தினசரி சென்று வந்த வண்ணம் உள்ளனர்.
நமது நாமக்கல்லில் அந்த அருட் சுவையை சுவைத்திடவும், சாயி சேவையில் நம்மை இணைத்துக் கொள்ளவும் சாய் தபோவனம்,
ஸ்ரீ சாயியின் திருவுளப்படி உருவானது.
சாய் தபோவனம்
2006 ஆம் ஆண்டு சாய் தபோவனத்திற்கான விதை சீரடியில் எங்கள் மனதில் விதைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு அதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டோம். ஸ்ரீ சாயின் திருவுளப்படி 2010 அக்டோபர் மாதம் விஜய தசமி அன்று சீரடி சாய் பாபா வழிபாட்டு மன்றத்தை – சாய் தபோவனத்தை நாமக்கல்லில் ஒரு பத்துக்கு பத்து அறையில் 5 பந்துக்கள் இணைந்து துவங்கினோம்.
முதலில் பாபாவின் திருப்பாதமும், பாபாவின் திரு உருவமும் பிரதிஸ்டை செய்து வழிபட்டு வந்தோம். பின் சாயி திருஉளப்படி சாய் தபோவன திருக்கோயில் கட்டுவதற்கு இடம் வாங்கப்பட்டது. 2013 ஆகஸ்ட் 22 ஆம் தேதி வியாழக்கிழமை கோவில் கட்டுவதற்கு பூமி பூஜை நடை பெற்றது. இரண்டு வருடம் கட்டுமானப் பணி நடந்து மன்மத வருடம் ஆவணி 3 (2015 ஆகஸ்ட் 20 ) ஆம் தேதி சாய் தபோவனம் பிரதிஷ்டை விழா நடை பெற்றது.
பாபாவின் பளிங்கு திருவுருவச் சிலையை கரூர் சாய் பந்து திரு.N.அங்கமுத்து சாய்ராம் அவர்கள் அர்ப்பணம் செய்தார்கள். கரூர் சின்மயா மிஷன் பூஜ்யஸ்ரீ அநுத்தமாநந்த சுவாமிகள், நாமக்கல் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம் ஸ்ரீமத் பூரண சேவானந்த மகாராஜ் ஆகியோர் முன்னிலையில் பிரதிஷ்டை நடை பெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பாபாவின் ஆசிகளைப் பெற்றனர். அனைவர்க்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
சாய் தபோவனம் நிகழ்வுகள்:
- தினசரி நான்கு வேளை ஆரத்தி தமிழில் நடைபெற்று வருகிறது.
- வியாழன் தோறும் பால் அபிஷேகம், கூட்டுப் பிராத்தனை, பாராயணம், நாம ஜபம் போன்றவை நடை பெற்று வருகின்றது.
- அன்னதானம்- வியாழன் தோறும் மூன்று வேளையும், பௌர்ணமி மதியமும் அன்னதானம் நடைபெற்று வருகின்றது.
- ஓவ்வொரு மாதமும் இரண்டாவது வியாழக்கிழமை இலவச சித்த கலிக்க மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
- சாய் தபோவனத்திற்கு பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக தினசரி வள்ளிபுரத்தில் இருந்து இலவச ஜீப் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.